என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருமானவரி சோதனை"
- திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
- வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். இவருடைய உறவினர் நவீன் குமார் (வயது 42).
இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசித்து வருகிறார்.
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று இரவு வருமானவரி துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.
மேலும் நவீன் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை
- புரசைவாக்கத்தில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலக்கரியை எடுத்துச் செல்ல பெரிய கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதேபோன்று மேலும் பல உபகரணங்களும் மின் உற்பத்திக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அனல்மின் நிலையங்களுக்கு கன்வேயர் பெல்ட் உள்பட மின் உற்பத்தி பொருட்களை 4 நிறுவனங்கள் தயார் செய்து வழங்கி வருகின்றன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனமும் பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர மற்ற 2 நிறுவனங்களும் சென்னையிலேயே செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வருமானவரித் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து இந்த 4 நிறுவனங்களின் செயல்பாடுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதில் 4 நிறுவனங்களும் போலியாக ரசீதுகளை உருவாக்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.
இதன்படி மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநர் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் மின் வாரியத்துக்கு பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் நீலாங்கரை, எண்ணூர், நாவலூர், செங்கல்பட்டு, தி.நகர், எருக்கஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான் பேட்டை, துரைப்பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனங்களில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 40-க்கும் மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்து வைத்திருந்தனர். இன்று அதிகாலையில் கார்களில் அணி வகுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது மின்வாரியத்துக்கு கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்ததில் எந்த மாதிரியான முறைகேடுகள் நடைபெற்று உள்ளன? என்பது பற்றி இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சப்ளை செய்யப்பட்ட உபகரணங்கள் மூலமாக போலியான கணக்குகளை காட்டி வரிஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையை அடுத்த சிறுசேரி, சிப்காட் வளாகத்திலும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பொன்னேரி வெள்ளி வாயல் சாவடியில் செயல்பட்டு வரும் சென்னை ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மற்றும் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் பந்தாரி குரூப், இண்டர்வேஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் உள்பட பொருட்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு இன்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திடீரென சென்றனர். பின்னர் அவர்கள் அனல் மின்நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அனல் மின்நிலையத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட மின் உபகரணங்கள் தரமானதா என்றும் அவற்றின் விலை குறித்தும் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்காமல் சம்பளம் ஒதுக்கி முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று வடசென்னை மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அனல்மின் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டு அது தொடர்பான ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து சென்ற 15 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குள் சென்றனர். முதலில் அவர்கள் அங்கு உள்ள தொழிற்சாலை பகுதிக்கு சென்றனர். அங்குள்ள ஒப்பந்ததாரர் மற்றும் அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதில் இருந்து ஒரு குழுவினர் பிரிந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கும் சோதனை நடத்த சென்றனர். இதனால் அனல் மின்நிலையத்தின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த சோதனையின் முடிவில் அங்கு என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன? எந்த மாதிரியான முறை கேடுகள் நடந்துள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.
- ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்
- ஏற்கனவே 4 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டியுள்ளார்
யூடியூப் மூலமாக பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் தஸ்லீம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.24 லட்சம் ரொக்கம் கிடைத்திருக்கிறது.
இந்த சேனல் நடத்தி வருபவரான தஸ்லீம், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, அவர் கிட்டத்தட்ட ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதித்திருக்கிறார். தஸ்லீம் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர் குடும்பம் இதனை மறுத்துள்ளது.
இதுகுறித்து தஸ்லீமின் சகோதரர் ஃபெரோஸ் கூறும்போது, ''டிரேடிங் ஹப் 3.0 (Trading Hub 3.0) என்ற யூடியூப் கணக்கை நிர்வகித்து வரும் தஸ்லீம், ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது வருமானத்திற்கு அவர் வருமான வரியும் செலுத்தி வருகிறார்.
மொத்த யூடியூப் வருமானமாக கிடைத்த ரூ.1.2 கோடி வருமானத்திற்கு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரி செலுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறோம். வேறு எந்த தவறான செயலும் செய்யவில்லை. சேனலில் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுதான் உண்மை. இந்த ரெய்டு ஒரு திட்டமிடப்பட்ட சதி."
இவ்வாறு ஃபெரோஸ் கூறியிருக்கிறார்.
தனது மகன் தவறாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக தஸ்லிமின் தாய் கூறியுள்ளார்.
- செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கொங்கு மெஸ் மணி வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
தமிழக அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது தம்பி அசோக்குமார் உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என இவருக்கு தொடர்புடையதாக கருதப்பட்ட சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டவர் வீடு, அலுவலகங்களில் கடந்த மே மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் அப்போது சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தி.மு.க.வினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் துணை ராணுவ படை போலீஸ் பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரது நண்பர்கள் சங்கர், கொங்கு மெஸ் மணி ஆகியோரது வீடு அலுவலகங்களில் சோதனை நடந்தது. இதனை தொடர்ந்து 2-வது முறையாக நடந்த சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி அந்த வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர்.
அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தால் அவர் வகித்து வந்த மின்சார துறை மற்றும் ஆயர் தீர்வை துறை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் 3-வது முறையாக தற்போது வருமான வரித்துறையினர் கரூரில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக கரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த வருமான வரித்துறையினர் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். கொங்கு மெஸ் மணி வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வீட்டில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை உடனடியாக உறுதிபடுத்த இயலவில்லை.
இந்த சோதனையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 8 நாட்கள் கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில் மீண்டும் அவரது வீட்டை குறிவைத்து வருமானவரிதுறை சோதனை தொடங்கியுள்ளது கரூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.
- வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
தூத்துக்குடி:
இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்து உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வருமானவரி சோதனை நடைபெற்றது. இதற்காக மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 16 பேர் 6 கார்களில் வந்தனர். அவர்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வங்கி தலைமை அலுவலகத்தின் 2 கட்டிடங்களிலும் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையின் போது, வெளியாட்கள் யாரும் வங்கி தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வங்கி பணியாளர்கள் மட்டுமே வழக்கம் போல் உரிய அடையாள அட்டையை காண்பித்து அலுவலகத்துக்கு சென்றனர்.
நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று காலை 6.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து இரவு, பகலாக 20 மணி நேர விசாரணையை முடித்து கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணிக்கு வங்கியில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது 5 பைகளில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக தெரிகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.
ஆனால் வங்கி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சில பரிவர்த்தனையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இந்த சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தைக்கு அனுப்பிய கடிதம் வெளியானது. அதில் 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ-ன் படி சட்டரீதியான விசாரணை நடந்தது.
இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும். இதனால் வங்கியின் எந்த செயல்பாடும் பாதிக்கப்படவில்லை' என்று தெரிவித்து உள்ளது.
- மெஸ் கார்த்தியின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஆகும்.
- மெஸ் கார்த்தி தொழில் காரணமாக கரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கரூர்:
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர்.
தொடர்ந்து 8 நாட்கள் நடந்த இந்த சோதனை கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது. முன்னதாக தொடக்க நாளில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை பெண் அதிகாரி உள்ளிட்டவர்கள் முற்றுகையிடப்பட்டு, காரும் உடைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உள்ளூர் போலீசாரை தவிர்த்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்ட து. இதில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்டமாக கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, சகோதரர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தங்களது அனுமதியில்லாமல் திறக்க கூடாது என்றும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இதற்கிடையே அவரது தம்பிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் கரூரில் இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூர் ஈரோடு சாலையில் சக்தி மெஸ் நடத்தி வரும் பங்குதாரர்கள் ரமேஷ், மெஸ் கார்த்திக். இவர்களது வீடு ஈரோடு ரோடு கோதை நகர் அன்னை அப்பார்ட்மெண்ட்டில் உள்ளது. இங்கு இன்று 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது. கடந்த மாதம் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையின்போது இவர்களது மெஸ்சிலும், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீடுகளின் இரண்டு அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.
இப்போது அந்த வீடுகளில் சீலை அகற்றி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் மெஸ் கார்த்தி தி.மு.க.வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
மெஸ் கார்த்தியின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஆகும். இவர் தொழில் காரணமாக கரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கரூரில் மீண்டும், மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருவது தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி நகை கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
- சோதனையை தொடர்ந்து சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை:
சென்னை சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் உள்ள நகை கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
நகை கடை உரிமையாளர் முறையாக வருமான வரியை கட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை 7 மணி அளவில் நகை கடை உரிமையாளர் வீட்டுக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், வீட்டில் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி நகை கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் காரணமாக சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் பரபரப்பு நிலவியது. வருமான வரித்துறையினர் நகை கடை உரிமையாளரை வீட்டுக்கு வெளியே தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு சோதனைக்காக சென்றிருந்தனர்.
இந்த சோதனையை தொடர்ந்து சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நகை கடை உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறையினர் உடனடியாக வெளியிடவில்லை. தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் மாநில தேர்தல் கமிஷன் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
- காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் மாநில தேர்தல் கமிஷன் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பல இடங்களில் இன்று வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவின் உதவியாளர் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
பிரியங்க் கார்கேவின் உதவியாளரான அரவிந்துக்கு சொந்தமான வீடு மற்றும் ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேேபால காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
- பட்டு சேலை கடைகளில் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனை 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் முதன்மையாக கலாமந்திர், மந்திர், காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் கே.எல்.எம். பேஷன் மால் என்ற பிராண்ட் பெயர்களில் பெண்களுக்கான பிரத்தியேக புடவை விற்பனை செய்து வருகிறது.
குறிப்பாக காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரமகாலட்சுமி பட்டு சேலை கடைகளில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.நகரிலும் இந்த கடைகளில் சோதனை நடைபெற்றது.
இதன் தலைமையகமான ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு இடத்திலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த குழுமத்தை பொறுத்தவரை அதிகப்படியான லாபத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த சோதனை 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவில் எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எவ்வளவு கோடி ரூபாய் இவர்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்ற முழு தகவல் செய்தி குறிப்பாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.
- சென்னையில் அய்யப்பன்தாங்கல், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள நிறுவன அலுவலகங்களில் சோதனை நடந்தது.
சென்னை:
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதித்யா ராம், அம்பாலால் உள்ளிட்ட 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 14-ந்தேதி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. இன்று 4-வது நாளாக இந்த சோதனை நீடிக்கிறது.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அய்யப்பன்தாங்கல், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள நிறுவன அலுவலகங்களில் சோதனை நடந்தது.
சென்னையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடைபெற்றது.
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அம்பாலால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடைபெற்றது. அம்பாலால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் மட்டும் கணக்கில் வராத 7½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் போதுமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
4-வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த 4 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வேலூர் பெருமுகையில் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
- 2 கார்களில் வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டது.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஷூ கம்பெனி மற்றும் தோல் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு உயர்தரம் மிக்க ஷூ மற்றும் பெல்ட், பர்ஸ், பேக் வகைகள் என பல்வேறு தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன.
இதில் பரிதா குரூப்ஸ் ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகள் பிரபலமானதாகும். ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுச்சேரி, சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை, ஷூ கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆம்பூரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது. ராணிப்பேட்டையில் பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 3 தொழிற்சாலைகள் உள்ளன.
ஆம்பூர் துத்திபட்டு, மோட்டு கொல்லை, எம்.சி.ரோடு ஆகிய இடங்களில் உள்ள பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறை அதிகாரி கிருஷ்ண பிரசாத் தலைமையில் காலை 8 மணிக்கு 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருமான வரித்துறையினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்த தொழிற்சாலைகளுக்கு வந்தனர். அவர்கள் உள்ளே சென்று அங்குள்ள அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டன. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஆம்பூர் பஜார் பின்புறம் நாகேஸ்வரன் கோவில் அருகே உள்ள தோல் கம்பெனியின் அதிபர் வீட்டிலும் சோதனை நடந்தது.
வேலூர் பெருமுகையில் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில் 2 கார்களில் வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டது.
இந்த தொழிற்சாலையில் மட்டும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வருமான வரி சோதனையால் இந்த அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதேபோல ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் உள்ள பரிதா குரூப்ஸ் சொந்தமான தோல் தொழிற்சாலைகளில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, புதுச்சேரி, ஆம்பூர், ராணிப்பேட்டை உள்பட பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
சென்னை ராமாபுரம் மவுண்ட் பூந்தமல்லி ரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலையின் அலுவலகத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
- 2 நாள் சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு உள்ளன.
- வருமான வரி அதிகாரிகளின் இடைவிடாத சோதனை, 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
அவனியாபுரம்:
மதுரையில் அவனியாபுரம், கோச்சடை, ஊமச்சிகுளம் உள்பட 10 இடங்களில் கிளாட்வே சிட்டி, அன்னை பாரத், ஜெயபாரத், கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் மண்டல புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி செந்தில்வேலன் அடங்கிய 50 பேர் குழுவினர், கடந்த 20-ந்தேதி காலை 7 மணி அளவில் மேற்கண்ட 10 இடங்களிலும் அதிரடி சோதனையை தொடங்கினார்கள். அப்போது அந்த நிறுவன பங்குதாரர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காண்ட்ராக்டர் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தினர். இதன் விளைவாக அங்கு கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பற்றிய விவரங்கள் தெரியவந்தது.
இது தொடர்பாக கட்டுமான நிறுவன பங்குதாரர்களிடம் இன்று அதிகாலை வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே மேற்கண்ட 10 இடங்களிலும் கைப்பற்றப்பட்டு உள்ள ஆவணங்கள், 2 ஹார்ட் டிஸ்க்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன. இன்னொருபுறம் தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப்பணியில் ஈடுபடுவதற்காக சென்னையில் இருந்து மதிப்பீட்டுக்குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
மதுரை கட்டுமான நிறுவன பங்குதாரர்களுக்கு சொந்தமான 12 வாகனங்களின் ஆவணங்கள், வருமான வரி தாக்கல் செய்த கணக்குகளுடன் ஒப்பு நோக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் 2-வது நாளாக நடந்த சோதனையில் கட்டுமான பங்குதாரர் முருகன், ஜெயக்குமார் ஆகியோர் வீட்டில் தற்போது வரை கணக்கில் காட்டப்படாத ரூ.72 கோடி ரொக்கப் பணம், சுமார் 20 கிலோ தங்கம்-வைர, நகைகள் மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே மதுரை கட்டுமான நிறுவன பங்குதாரர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இன்று அதிகாலை 2 கார்களில் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
2 நாள் சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகளின் இடைவிடாத சோதனை, 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சோதனையின் போது மதுரை அவனியாபுரத்தில் உள்ள ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டியின் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான முருகன் என்பவரின் வீட்டில் இருந்து பலகோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்